பிதாவாகிய தேவன்: பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிறோம், அவரே சர்வ வியாபியும், எல்லாவற்றிற்க்கும் முதலாவதாகவும் நம்புகிறோம். அவரையன்றி வேறே தேவனோ அல்லது கடவுளோ இல்லை என்றும். உலகம் முழுவதையும் நியாயம் தீர்க்கக்கூடியவர் அவரே. அவர் மரணத்தின் மேலும், நரகத்தின் மேலும் அதிகாரம் கொண்டவர்.
குமாரனாகிய கிறிஸ்து: தேவனுடைய ஒரே பேரான குமாரனாகிய கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம். அவரே மனித பாவங்களைப் போக்க ஒரேதரம் பாவமில்லாமல் சிலுவையிலே பலியானார். மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீட்டிருந்து மனிதனுக்காகப் பரிந்து பேசுகிறார். அவரே அவரின் ஜனங்களை மீட்க இரண்டாம் தரம் இந்த பூமிக்கு ராஜாவாக வருவார்.
பரிசுத்த ஆவியானவர்: தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம். அவரே இயேசு கிறிஸ்து பரமேறிய உடன் பிதாவினால் அருளப்பட்ட பாதுகாவலர். தமதவர்களை பாதுகாத்து நல்வழிபடுத்துபவர். பாவத்தை கண்டித்து உணர்த்துபவர். கடவுளின் மும்மைதுவதில் மூன்றாவதாக இருப்பவர். ஆவியின் வரங்களைத் தருபவர். இவர் மூலமாக பரலோக ரகசியங்களை அறிய முடியும்.
மும்மைதுவம்: பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் பிரிந்து இருகின்றபோதிலும் ஒரே கடவுளாய் (தேவனாய்) இருக்கிறார்கள். செயல், சிந்தனை மற்றும் ஆக்கம் ஆகியவற்றில் ஒருவராய் காணப்படுகின்றார். இவர்கள் கடவுள்கள் அல்ல. இவர்களே கடவுளாய் (ஒருமை) இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து கடவுளின் அவதாரம் அல்ல, அவரே கடவுள் என்பதற்கு இது ஒரு சான்று.
இரண்டாம் வருகை: இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறோம். அவர் வெள்ளைக் குதிரையில் பிதாவினால் முன்குறிக்கப்பட்ட நாளில் தமது ஜனங்களை தம்மிடமாய் சேர்த்துக்கொள்ள மத்தியவானத்தில் தோன்றுவார். அவரே அவரை அறியாதவர்களை நியாயம் விசாரிக்கும் நியாயாதிபதியாக செயல்படுவார். பூமியின் மீதெங்கும் பாவத்தையும், மரணத்தையும் துர்குணத்தையும் அழித்துப்போடும் வல்லமையோடு வெளிப்படுவார்.
ஆயிரவருச அரசாட்சி: தேவன் தானே தமது வல்லமையோடு ஆயிரம் வருஷம் ராஜாதி ராஜாவாக இந்த உலகத்தின் மீது ஆட்சி செய்வார் (உபத்திரவம் முடிந்த ஏழு ஆண்டுகளுக்கு பின்னர்). அந்நாட்களின் சாத்தான் பாதாளத்தில் கட்டப்பட்டிருப்பான். நாம் அவருடனே கூட உலகத்தை ஆட்சி செய்வோம். கேடு செய்பவர்கள் உலகத்தில் இருக்கமாட்டார்கள். அனைவரும் கர்த்தரை மாத்திரம் தொழுதுகொள்வார்கள். (இவற்றின் பின்னர் அவரை நம்பாதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு).
ஞானஸ்நானம்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியினாலே முழுவதும் தண்ணீரில் மூழ்கி எடுக்கப்படும் ஞானஸ்நானத்தை மாத்திரம் விசுவாசிக்கிறோம். அதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமரன் என்றும், அவரே மனித பாவங்களுக்காக மரித்தார் என்றும், அவரே மீண்டும் வருவார் என்றும் விசுவாசித்திருக்க வேண்டும். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றிருக்க வேண்டும், பரிசுத்தவான்களின் ஐக்கியமாக இருக்க வேண்டும்.
மரித்தப்பின் வாழ்க்கை: மனிதன் இந்த உலகத்தில் இறந்து போனாலும் அவனுக்கு மற்றும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று விசுவாசிக்கிறோம். அது அவனின் தேவனைப் பற்றிய அறிவினாலும் விசுவாசத்தினாலும், பரலோகம் என்று சொல்லப்படும் பரதீசிலோ அல்லது நித்திய அழிவாகிய நரகத்திலோ காலா காலமாக என்றென்றும் இருக்கும். பரதீசில் கடவுளோடு நீடுடிய மகிழ்ச்சியான வாழ்வும் நரகத்தில் சாத்தானோடு நித்திய துன்பமும் இருக்கும்.
மறுபடியும் பிறத்தல்: மனிதனின் இரட்சிப்பையும் மீட்பையும் அதனால் உண்டாகும் மறுபிறப்பையும் விசுவாசிக்கிறோம். மனிதன் தன் தாயின் வயிற்றில் பிறப்பதைத் தவிர, கடவுளுக்குள் அதாவது தனது ஜன்ம கரும பாவங்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்ற நிச்சியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்நிய பாஷைவரம்: பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக அந்நியபாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறோம். அது அவரால் முன்குறிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது தேவனோடு பேசவும், மறை ஞானத்தை அறிந்து கொள்ளவும், ரகசியங்களை பேசவும் பயன்படுகின்றது. இதனால் பேசும் போது ஒருவன் தன்னை கடவுளோடு ஐக்கியப்படுத்துவதோடு தன்னையும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுகிறான்.
திருமணம்: தேவன் விரும்பும்படி வேதாகம முறைமையின்படி ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலமாக தேவன் கூறியபடி இணைவதை விசுவாசிக்கிறோம். கர்த்தரோடு ஐக்கியப் படுவதுபோல திருமண பந்தத்தினால் மனுஷனோடு இணக்கப்படுவது நல்லது. ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்தத் தெரியவில்லையானால் எப்படி தேவனுடைய சபையை நடத்த முடியும். கடவுள் முறையான திருமணத்தை விரும்புகிறார் மற்றும் ஆசிர்வதிக்கிறார்.
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது: தெளிப்பு ஞானஸ்நானம், இயேசுவின் நாமம் மாத்திரம், யகோவா தேவன் மாத்திரம், ஏழாம் நாள் தேவனுடைய நாள், சர்வ வல்லவரின் சேனை முதலிய போதனைகளை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.
வேத போதனை: இந்த கையளிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டதை விட வேறு எந்த விதமான போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மனிதாபிமானம்: தனிமனித சுதந்திரத்தையும், அவனது உணர்வுகளையும் மதிக்கிறோம். புறமதத்தினரை சகோதரர்களாக பாவிக்கிறோம். முடிந்தவரை தேவையில் உள்ளவர்களுக்கு பண, பொருள் உதவிகளைச் செய்கின்றோம் மற்றும் செய்ய தூண்டுகிறோம்.
நமக்குள் தேவன்: தேவன் நமக்குள் வாசம் செய்தாலும், அவர் பரிசுத்தவான்களின் கூடுதலை விரும்புகிறார். அதனால் சபைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து ஞாயிறு ஆராதனை செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
வீட்டு சபைகள்: கிராமங்கள் தோறும் வீட்டு சபைகள் செயல் படுவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் அவை ஒரு மேலான ஒரு அதிகார மேற்பார்வையின் கீழ் இருப்பதை போதிக்கிறோம்.
கிருபை வரங்கள்: தேவன் அவன் அவன் தகுதிக்குத் தக்க கிருபை வரங்களைத் தருகிறார் என்று விசுவாசிக்கிறோம். தீர்க்கதரிசன வரத்தையும், வியாதியை சுகமாகும் வரங்களும், அசுத்த ஆவிகளை துரத்தும் வரமும், வியாக்கியான வரங்களையும், ஆவிகளைப் பிரித்தறியும் வரங்களையும், அந்நிய பாஷை வரங்களையும், ஜெப வரத்தையும், போதிக்கும் வரத்தையும் விசுவாசிக்கிறோம் மற்றும் ஊக்குவிக்கிறோம்.
கலக்குபவர்கள்: சுற்று ஊழியர்களையும், தேசாந்திரியான சுவிசேசகர்களையும் வீடுகளில் ஏற்கவும், ஜெபிக்கவும், சபை ஊழியரின் அனுமதியின்றி வீடுகளில் தங்கவோ கண்டிப்பாக சபை மக்களுக்கு அனுமதி இல்லை. இவர்கள் தேவ மக்களின் மனதில் களையை விதைக்க வாய்ப்புகள் இருப்பதால் இவ்வாறு உள்ளது.
தனிமனித ஊழியம்: ஒவ்வொருவரும் தனி மனித ஊழியம் செய்வதை ஊக்குவிக்கிறோம். சுவிசேஷம் பிரசங்கித்தல், துண்டு பிரதிகளை தேவனை அறியாதவர்களிடம் வழங்குதல், சபைக்கு வழிநடத்துதல், ஆவிக்குரிய காரியத்தில் நடத்துதல், சபை மக்களை ஜெபத்தில் தாங்குதல்.
கொடுத்தல்: தேவனுடைய ஊழியத்திற்கு பணத்தினாலும், பொருளினாலும் தாங்குவது விண்ணுலகில் பொக்கிஷத்தை சேர்த்து வைக்கும் என்று விசுவாசிக்கிறோம். கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வார்த்தையின் படி. தேவனுக்கு மன உற்சாகமாய் கொடுப்பதை ஊக்குவிக்கிறோம். தசமபாகம், பொருத்தனை காணிக்கை, மிஷனரி காணிக்கை, உற்சாகக் காணிக்கை, சபை கட்டுமானப் பணி காணிக்கை, முதற்பலன் காணிக்கை மற்றும் சபை ஆராதனை காணிக்கை.